டெங்கு கொசு ஒழிப்பில் நடக்கும் பயங்கரங்கள்: சில அதிர்ச்சித் தகவல்கள்!
டெங்கு கொசு ஒழிப்பில் நடக்கும் பயங்கரங்கள்: சில அதிர்ச்சித் தகவல்கள்!
டெங்கு காய்ச்சலுக்கு இந்த ஆண்டு 26 பேர் பலியாகியுள்ளதாகவும், 10 ஆயிரம் பேர் இதுவரை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளதாகவும் தமிழக அரசின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஆனால் எதிர்க்கட்சிகளோ, தமிழகத்தில் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்கள் லட்சக்கணக்கில் என்றும், இறந்தவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டும் என்றும் குற்றம்சாட்டிக்
கொண்டிருக்கின்றன.
குறிப்பாக எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் சில நாட்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'இதுவரை டெங்கு காய்ச்சலுக்கு 26 பேர் மட்டுமே உயிரிழந்ததாக அரசு தரப்பு கூறுவதில் உண்மையில்லை. தினமும் 10 பேர் டெங்கு காய்ச்சலால் இறப்பதாகவும், இதுவரை 400-க்கும் மேற்பட்டவர்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டு இறந்திருப்பதாகவும் எங்களுக்கு ஆதாரபூர்வமாகத் தகவல் வந்திருக்கிறது!'
என தெரிவித்துள்ளார்.
அதே சமயம் கடந்த ஆண்டு பக்கத்து மாநிலமான கேரளத்தில் டெங்கு காய்ச்சலால் மட்டும் எழுநூறுக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாகவும், லட்சக்கணக்கானோர் டெங்குவுக்கு சிகிச்சை பெற்றுள்ளதாகவும். கடந்த ஜூன் மாதம் 21-ம் தேதியன்று மட்டும் ஒரே நாளில் கேரள மாநிலம் முழுவதும் 29 ஆயிரத்து 969 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு
அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும், திருவனந்தபுரத்தில் உள்ள ஆஸ்பத்திரிகளில் மட்டும் 11 ஆயிரம் பேர் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் புள்ளிவிவரங்கள்
வெளியாகின.
அதே சமயம் அதன் அண்மை மாநிலமான தமிழகத்தில் அந்த சமயம் டெங்கு காய்ச்சலே கிடையாது என்ற அறிக்கைகள் வந்து கொண்டிந்தன. ஒரு நாளில் கேரளத்திலிருந்து
தமிழகத்திற்கு மட்டும் எல்லையோரங்களில் உள்ள மக்களின் இடம் பெயர்வு லட்சக்கணக்கில்
உள்ளது. உதாரணமாக கோவையிலிருந்து கேரளாவிற்கு விருந்திற்கு சென்று வந்த ஒருவர் வீட்டில் மட்டும் அடுத்தடுத்து ஐந்து பேருக்கு டெங்கு வாட்டிப்போட அந்த குடும்பமே மருத்துவமனையில் இருந்ததை நாமே காண நேரிட்டது. அப்படியிருக்க,
கேரளத்தில் டெங்கு அந்தப் போடு போட, இங்கே டெங்குவே இல்லை; வெறும் வைரஸ் காய்ச்சல், மர்மக் காய்ச்சல் என்றெல்லாம் சொல்லுவது அபத்தமான ஒன்று மட்டுமல்ல; மக்களின் உயிரோடு அரசே விளையாடும் சமாச்சாரம் என்பதை அப்போதே உணர முடிந்தது.
அதையேதான் அப்போது எதிர்க்கட்சிகளும்
குற்றச்சாட்டுகளாய் வைத்தன. அதிகாரப் போட்டியில் இருந்த ஆட்சியாளர்கள் அதைக் கண்டுகொள்ளவே இல்லை. இப்போது ஆற அமர பல உயிர்கள் மடிந்த பிறகு, பிரச்சினைகள் தெருவுக்கு வந்து மக்கள் போராடும் நிலையில்தான் 26 பேர் மட்டுமே டெங்குவால் பாதிக்கப்பட்டு
உயிரிழந்திருப்பதாகவும், 10 ஆயிரம் பேர் டெங்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் ஏடிஎஸ் ஏஜிப்டி வகை கொசு.
உண்மையில் தமிழகத்தில் மக்களை வாட்டும் டெங்கு விவகாரத்தில் என்னதான் நடக்கிறது? என்பதை சில மருத்துவ, சுகாதாரத்துறை
உயர் அலுவலர்களிடம்
பேசினோம். பெயரை வெளியிட்டு விட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டு அவர்கள் பேசியதில் பல அதிர்ச்சிகர உண்மைகள் மட்டுமல்ல; அரசியலும் வெளிப்பட்டன. அவற்றை இங்கே தொகுத்துள்ளோம்.
ஏடிஸ் (Aedes) கொசு டெங்கு நோயாளி ஒருவரைக் கடித்துவிட்டு,
டெங்கு வைரஸை தான் ஏற்றிக் கொள்கிறது. அந்த டெங்கு ஏடிஸ் கொசு நன்றாக உள்ள ஒருவரை கடிக்கும்போது அவருக்கும் டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. அதனால் ரத்த அணுக்கள் வெகுவேகமாக குறைந்து மரணம் சம்பவிக்கும். இந்த வகை கொசுக்கள் நல்ல நீரில்தான் வளரும். அதில்தான் முட்டையிடும். முட்டை, லார்வா பருவம் மாறி முழு கொசுவாக ஏழாம் நாள் புறப்படும். உடனே மனிதனை கடிக்கும். உடனே முட்டையிட ஆரம்பித்து விடும்.
தற்போது உலகில் 128 நாடுகள் ஏடிஸ் இன கொசுக்களின் பிடியில் சிக்கியுள்ளன. இதன் மூலம் டெங்கு பரப்பும் கொசுக்கள் 3.9 பில்லியன் மக்களை அச்சுறுத்தும் கொசுவாக மாறி இருக்கிறது. எனவே இதை உலக அளவில் ஒழிக்க வேண்டிய கொசு என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. நமக்குத் தேவையற்ற எந்த பொருளையும் வைத்திருக்காமல்
அழித்துவிட்டு இருப்பிடம் மற்றும் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருப்பதே நல்லது எனவும் உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. இந்த கொசுவை ஒழிக்க முழுமையான மருந்துகள் இன்னும் சந்தைக்கு வரவில்லை.
என்றாலும் கொசு ஒழிப்புக்கு அபேட் என்ற மருந்து கரைசலை வீடுகள் தோறும் தண்ணீர் தொட்டிகளில் விடப்படுகிறது.
6 நாட்களுக்கு ஒரு முறை தொடர்ந்து 4 வாரங்கள் இந்த மருந்து ஊற்றுவதன் மூலம் இவ்வகை கொசுவை கொசுவின் முட்டையோடு சேர்த்து பூண்டோடு ஒழித்து விட முடியும். இதற்காகவே அந்தக் காலத்தில் நம் சுகாதாரத்துறை
ஊழியர்கள் வீடுகள் தோறும் வருவார்கள். கொசு மருந்து அடிப்பார்கள். வீட்டின் சுவற்றில் ஒரு பென்சிலால் கட்டம் போட்டு மருந்தடித்த அன்றைய தேதியை குறிப்பிட்டு எழுதி கையெழுத்திட்டு விட்டு போவார்கள். அதே தெருவில் அடுத்ததாக சுகாதாரத்துறை ஆய்வாளர் வருவார். பிறகு சுகாதாரத்துறை அலுவலர் வருவார். வீடுகளில் மருந்தடிக்கப்பட்டுள்ளதை அந்த கட்டத்தை பார்த்து தெரிந்து கொள்வார்கள். ஒரு வேளை குறிப்பிட்ட வீட்டில் மருந்து போடவில்லை என்றால் உடனே சம்பந்தப்பட்ட தெருவுக்கு பொறுப்பான ஊழியர் மீது நடவடிக்கை பாயும். சுகாதாரத்துறை ஆய்வாளர் மீதும் நடவடிக்கை இருக்கும்.
'இப்போதெல்லாம் அப்படி எங்காவது நடக்கிறதா? நடக்கவே வாய்ப்பில்லை!' என சொல்லிவிட்டு அதையொட்டி நிறைய பேசினார் ஒரு சுகாதாரத்துறை அலுவலர். 'முன்பெல்லாம் ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பிலும் (ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி) பொது மருத்துவத்துறை
மூலமாக நிரப்பப்பட்ட மருத்துவர்கள் (நகர்நல அலுவலர்களாக) இருந்தாங்க. டெங்கு, மலேரியா போன்ற நோய் பரப்பும் கொசுக்களை பரப்பும் விஷயத்தில் நேரடியாக நடவடிக்கைகளை சுதந்திரமாக எடுத்தார்கள்.
அது கீழுள்ள ஊராட்சியில் மட்டுமல்ல, பெரிய அளவில் உள்ள மாநகராட்சி, பெருநகரங்களிலும்
நடந்தது. அந்த மருத்துவர்கள்தான் துப்புரவு ஊழியர்கள் முதல் சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் வரை கண்ட்ரோல் பண்ணினாங்க. அவர்களின் செயல்பாட்டை அந்த மாநகராட்சி மற்றும் நகராட்சியின் ஆணையாளர் கூட கட்டுப்படுத்த
முடியாத நிலை இருந்தது. ஒரு ஏரியாவில் திடீரென்று மலேரியா, டெங்கு பரவல் கண்டறிப்பட்டால் இன்னொரு ஏரியாவிலிருந்து சுகாதாரப் பணியாளர்கள், துப்புரவுப் பணியாளர்களை யாருடைய அனுமதியும் இன்றி ஒரே மணிநேரத்தில் மாற்றி விடவும் முடிந்தது. இதில் ஒத்துழைக்காத ஆட்களை உடனே வேறு இடத்திற்கு மாறுதல் போடவும், சஸ்பெண்ட் செய்யவும் கூட இயன்றது.
இப்படி பணிகள் நடந்த வரை இந்த நோய் மற்றும் சுகாதார விஷயத்தில் முழு பொறுப்பும் அந்த நகர் நல அலுவலரான மருத்துவரே இருந்தார். இந்த நிலையில்தான் கும்பகோணம் நகராட்சியில் 1983 வாக்கில் ஒரு பிரச்சினை வந்தது. அப்போதைய சுகாதாரத்துறை
அமைச்சர் முறைகேடாக ஒரு பட்டியலை கொடுத்து அவர்களுக்கெல்லாம் பணியிடம் (போஸ்டிங்) போடச் சொன்னார். அதை ஏற்க மறுத்துவிட்டார்
அந்த நகர்நல அலுவலர். அவர் மீது நகராட்சி ஆணையாளரையும் ஏவி விட்டுப் பார்த்தார் அமைச்சர். ஒண்ணும் செய்ய முடியலை. அதில் ஆணையருக்கும் வருத்தம்.
இவர் ஒரு மருத்துவர். 3 வருடம் பொது மருத்துவத்துறையிலிருந்து பணிமாறுதலில் (டெபுடேஷன்) வந்தவர். இவருக்கு நம் முனிசிபாலிட்டிதான் சம்பளமும் தருகிறது. அவரை நம் கண்ட்ரோலில் வைக்க முடியலைன்னா என்ன அர்த்தம்? துப்புரவுத் தொழிலாளர்கள், சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு பணி தருவது, சலுகைகள் தருவது எல்லாமே இவர் என்றால் நம் பதவிக்கு என்ன மதிப்பு என்று ஈகோ கிளாஸ் வந்தது. அதை சுகாதாரத்துறை ஊழியர்களை வைத்து அரசியல் 'லாபி' கிரியேட் செய்தார். அந்த வகையில் சுகாதார ஆய்வாளர்களாக இருப்பவர்களுக்கு
அடுத்ததாக சுகாதார அலுவலர் என்ற பணியிடத்தை ஏற்படுத்தினார். அந்த பணியிடத்திற்கு
சுகாதார ஆய்வாளர்கள் பதவி உயர்வின் அடிப்படையில் வரமுடியும். அவர்கள் ஆணையரின் கண்ட்ரோலில் இயங்குமாறு விதிமுறைகள் வகுக்கப்பட்டது.
அதற்கு அப்போதைய அமைச்சரும் ஒத்துழைத்தார். அதனால் நகர் நல அலுவலர் -எம்.எச்.ஓ. (MHO-Municiple Health officer) மாநகர நல அலுவலர்- சி எச்.ஓ (CHO- Corporation
Health Officer) மாவட்ட நல அலுவலர் டிஎச்ஓ (DHO- District health officer) பதவிகள் எல்லாம் டம்மியாக்கப்பட்டன.
அவையெல்லாமே அந்தந்த ஆணையர், செயல் அலுவலர்களின் கீழ் கொண்டு வரப்பட்டது. அதனால் மருத்துவத்துறையிலிருந்து வரும் மருத்துவர்கள் எல்லாமே இந்த ஆணையர்களை, செயல் அலுவலர்களை கலந்தாலோசித்தே முடிவுகள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதிலும் பல இடங்களில், பல மாவட்டங்களில் எம்எச்ஓ, சிஎச்ஓ பதவிகளே நிரப்பப்படாமல்
நகர சுகாதார அலுவலர், மாநகர சுகாதார அலுவலர் பதவிகளில் உள்ளவர்களை கொண்டே பணிகளை கவனிக்க ஆரம்பித்தனர். இன்னும் சொல்லப்போனால்
நான்கைந்து மாவட்டங்கள் சேர்ந்து கவனிக்க முன்பு ஆர்ஏடி என (Regional Assistant Director) பொது சுகாதாரத்துறை உதவி இயக்குநர் பதவி இருந்தது. அந்த பதவி இப்போது சுத்தமாக இல்லை என்பதுதான் கொடுமை!' என்று சொல்லி அந்த பதவி இல்லாததால் என்ன பிரச்சினை என்பதையும் விளக்கினார்:
'டிஎச்ஓவாக இருந்து ஆர்ஏடியாக வரும் ஒரு மருத்துவர் கோவை, ஈரோடு, சேலம், நீலகிரி, திருப்பூர், நாமக்கல் என்று ஆறு மாவட்டங்கள் பார்க்கிறார் என வைத்துக் கொள்வோம். திடீரென்று நீலகிரியில் டெங்கு பாதிப்பு அதிகமாக இருக்கிறது. அங்கே பணியாளர்கள் குறைவாக இருக்கிறார்கள்
என வைத்துக் கொள்வோம். உடனே அங்கே தேவையான நூற்றுக்கணக்கான ஊழியர்களை கோவையிலிருந்தும், ஈரோட்டிலிருந்தும், திருப்பூரிலிருந்தும் போர்க்கால நடவடிக்கையாக கொண்டு போய் சேர்க்க முடியும். அவ்வளவு ஏன் இந்த ஆர்ஏடி என்பவர் நேரடியாக மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநரிடம் பேசி உடனடியாக எச்சரிக்கை நடவடிக்கையாக என்னவெல்லாம் செய்யலாம் என்று கலந்தாலோசிக்க முடியும். இப்போது உள்ள சிஸ்டம் மூலமாக அதை செய்ய முடியாது. எதுவானாலும் ஆணையாளரிடம் கேட்டு, அவரிடம் விஷயத்தை விளக்கியே நோய்த்தடுப்பு நடவடிக்கை எடுக்க முடியும். அப்படி நடவடிக்கை எடுப்பதற்குள் நோயின் தீவிரம் பல மடங்கு குறிப்பிட்ட இடத்தில் பெருகிவிடும் என்பதுதான் இதில் உள்ள அதிர்ச்சி!' என்றார்.
சரி, இந்த சிஸ்டம் மாற்றியமைக்கப்பட்டதற்கும் டெங்கு பெருகுவதற்கும் என்னதான் சம்பந்தம்?
'இப்ப வீடுவீடாக கொசு மருந்து அடிக்க வர்றவங்க எங்காவது தாங்கள் மருந்தடித்த விவரத்தை அந்த வீட்டில் எழுதி வைப்பதில்லை என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். அவர்கள் அடிக்கும் மருந்து அபேட்டே இல்லை. அதன் மீது நடவடிக்கையும் இல்லை !' என்று கூலாக ஆரம்பித்து விளக்கினார் ஒரு பொது மருத்துவர்.
'இன்றைய தேதிக்கு அபேட் மருந்து ஒரு கிலோ ரூ.1,800க்கு விற்கிறது. இந்த மருந்து கரைசலை ஊற்ற வரும் துப்புரவு ஊழியர்கள் எல்லாம் ஒப்பந்த பணியாளர்கள். மிகக்குறைந்த ஊதியத்தில் தனியார் ஒருவரிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டவர்கள். நகராட்சி இவர்கள் தலைக்கு கணக்குப் போட்டு சுமார் ரூ.12 ஆயிரம் ஊதியமாக தனியார் நிறுவனத்திடம்
கொடுக்கிறதென்றால், அதில் வெறும் ரூ. 5 ஆயிரம் மட்டுமே அவர்களுக்கு அந்த தனியார் நிறுவனம் கூலியாக கொடுக்கிறது. எனவே அவர்கள் வீடுதோறும் மருந்து விட வரும்போது மக்களிடம் வரும்படியை எதிர்பார்க்கிறார்கள். அப்படி தரமறுக்கும் வீட்டுக்காரர்கள் மருந்தே விடவேண்டாம் போ! என்று விரட்டி விடுகிறார்கள். மருந்து அடிக்கிற வீட்டிற்கும் அபேட் மருந்துக்கு பதில் பிளிச்சிங் பவுடரை கலந்து கொண்டு வந்து ஊற்றி வந்தார்கள்.
ஒரு கட்டத்தில் இந்த அபேட் கரைசலை ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்ததாரரே அபேட் என்ற பெயரில் பிளிச்சிங் பவுடரை கொடுத்து அனுப்ப ஆரம்பித்து விட்டார். இப்போதும் உங்கள் வீட்டுக்கு மருந்து ஊற்ற வரும் ஊழியரிடம் அந்த மருந்தை வாங்கி சோதனையிட்டுப் பாருங்கள். நிச்சயம் 90 சதவீதம் பிளிச்சீ்ங் மருந்தாகத்தான்
இருக்கும். ஒரு கார்ப்பரேஷனில் ஒரு முறை 10 ஆயிரம் கிலோ அபேட் வாங்கியதாக கணக்கு காட்டுகிறார்கள்
என வைத்துக் கொள்வோம். பிளிச்சிங் பவுடர் கிலோ வெறும் ரூ.10 மட்டுமே. அபேட்டுக்கான மீதி ரூ. 1790 (கிலோ) ஊழலாக மாறுகிறது. அதாவது 1 கோடியே 79 லட்சம் ரூபாய் ஒரு மாநகராட்சியில் மட்டும் அபேட் ஊழல் நடக்கிறது என்று பொருள். இதை செய்பவர்கள் குறிப்பிட்ட அமைச்சர் பெயரையே சொல்லி விளையாடுகிறார்கள்.
அவரின் சொந்தக்காரர் என்றும் அதிகாரிகளை மிரட்டுகிறார்கள்.
அது எந்த அளவுக்கு உண்மை என்பதை யார் கண்டுபிடிப்பது?' என்று வேதனை தெரிவித்த அவர் மேலும் பல அதிர்ச்சி தகவல்களை விவரித்தார்.
அவர் சொன்னது இதுதான்:
'ஏடிஸ் கொசு வாழ்நாள் 21 நாள் என்பது பழைய கண்டுபிடிப்பு. இவர்களின் இந்த அபேட் மருந்துக் கரைசல் ஊற்றும் ஊழல் குளறுபடிகளால்
தன்னை நன்றாகவே ஸ்திரப்படுத்திக் கொண்டிருக்கிறது. அது தன் வாழ்நாளை தற்போது 40 நாட்களாக மாற்றிக் கொண்டுள்ளதாக ஒரு மாதத்திற்கு முன்பு ஆய்வு செய்து சொல்லியிருக்கிறது
ஐசிஎம் ஆர் (Indian Council Medical
Research) மையம். அது மட்டுமல்லாது முன்பு டெங்கு நோயாளியை கடித்தால்தான் ஏடிஸ் கொசு டெங்கு கொசுவாக மாறி அடுத்தவரை கடிக்கும்போது
டெங்கு காய்ச்சல் பரவும் என்றிருந்தது. இப்போது அப்படியில்லை. டெங்கு கொசு இடும் முட்டையிலேயே டெங்கு கிருமி படிந்துள்ளதாக,
அவையெல்லாமே டெங்கு கொசுவாகவே பிறப்பதாக கண்டுபிடித்துள்ளார்கள்.
ஆக, இந்த கொசுக்களுக்கு
டெங்கு நோயாளிகளின் ரத்தமே தேவையில்லை. நேரடியாக பிறக்கும்போதே டெங்கு பரப்பும் தன்மையை பெற்று விடுகின்றன. இதன் மூலம் 6 நாட்களுக்கொரு
முறை 21 நாட்கள் வரை அபேட் மருந்தடித்த நிலை மாறி, அதையே 6 நாட்களுக்கு ஒரு முறை 40 நாட்களுக்கு மருந்தடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. தவிர டெங்கு நோயாளியை விட டெங்கு கொசு முட்டைகளை சுத்தமாக தேடித்தேடி ஒழித்தே ஆக வேண்டிய கட்டாயம் சுகாதாரத்துறைக்கு ஏற்பட்டிருக்கிறது. ஒரு ஏடிஸ் கொசு ஒருநாளைக்கு 350 முட்டையிடுகிறது. அது தன் 40 நாள் வாழ்நாளில் குறைந்தபட்சம்
4 கோடியே 11 லட்சத்து 77 ஆயிரத்து 150 முட்டையிடுகிறது. இவை 6 நாட்களுக்கு ஒரு முறை முழு உருப்பெற்று பறந்து, உடனே டெங்கு கொசு முட்டைகளை இட ஆரம்பித்து பெருக்கிக் கொண்டே இருக்கிறது என்பது எவ்வளவு ஆபத்து.
முன்பெல்லாம் தனியார் மருத்துவமனைகள்
எல்லாம் தன்னிடம் வரும் டெங்கு காய்ச்சல் நோயாளிகளின் கணக்குப் பட்டியலை மாவட்ட சுகாதாரத்துறை, மாநகர, நகர சுகாதாரத்துறை அலுவலகத்தில் கொடுக்க வேண்டும். அதை வைத்து, அரசு மருத்துவமனைகளில்
டெங்கு நோயாளிகளின் வருகையை வைத்தும் மாவட்ட சுகாதாரத்துறை டெங்கு மற்றும் மலேரியா காய்ச்சல் கணக்கை புள்ளி விவரமாக வைத்து அது காணப்படும் இடங்களில் போர்க்கால நடவடிக்கையில் இறங்கும். இப்போதெல்லாம் பல ஆண்டுகளாக தனியார் மருத்துவ மனைகள் இந்த பட்டியலை அரசு சுகாதாரத்துறைக்கு கொடுப்பதில்லை. கொடுப்பதிலும்
பல ஒழுங்கீனங்கள்
உள்ளது.
உதாரணமாக கோவையில் மட்டும் 112 தனியார் மருத்துவமனைகள் உள்ளன. அரசு மருத்துவமனைக்கு வருபவர்களை விட இங்கே வரும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகம். ஆனால் பெரும்பாலான மருத்துவமனைகள்
டெங்கு பாதித்தோர் பட்டியலை சுகாதாரத்துறைக்கு தரவில்லை என்பதே உண்மை. இன்றைய தேதிக்கு தினசரி கோவை அரசு மருத்துவமனையில் மட்டும் 30 டெங்கு நோயாளிகள் வருவதாக கணக்கை மட்டும் வைத்துக் கொண்டு தோராயமாக மற்ற தனியார் மருத்துவமனைகளில் எவ்வளவு இருக்கும் என கணக்குப் போட்டே சுகாதாரத்துறையினர் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். இது எப்படி சரியாகும்? சரி, இந்த விவகாரத்தை எந்த அதிகாரிகள் வெளிப்படையாக தெரிவிப்பார்கள்?
மாவட்ட, மாநகர பதவிகளில் ஒரு மருத்துவ அதிகாரி மாறுதல் வாங்கி வந்து உட்கார வேண்டுமானால் அமைச்சருக்கு ரூ. 25 லட்சம் முதல் ரூ. 30 லட்சம் வரை கொடுக்க வேண்டியிருக்கிறது.
அப்படி செலவழித்து வந்து மாறுதல் வாங்கி வரும் அதிகாரி தான் போட்ட முதலீட்டை ஒற்றைக்கு ரெட்டையாக சம்பாதிக்க முயற்சிப்பாரா?
இந்த உண்மையை சொல்லி உள்ளதையும் இழந்துட்டு தண்ணியில்லாக்காட்டுக்கு போக விருப்பப்படுவாரா? ஆக, டெங்குவில் அத்தனை பேரும் மக்கள் உயிரோடுதான் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இது நாளாக நாளாக இன்னமும் மோசமான நிலையை உருவெடுக்கும். இதில் மத்திய அரசு தலையிட்டு ஏதாவது ஒரு முடிவை திடமாக நேர்மையாக எடுக்காவிட்டால்
பெரிய ஆபத்துதான்!' என்று சொல்லி முடித்தார்.
Comments
Post a Comment