வணிக நூலகம்: உங்களுடைய வழி தனி வழியாக இருக்கட்டும்..!

வணிக நூலகம்: உங்களுடைய வழி தனி வழியாக இருக்கட்டும்...

 மார்ஷல் கோல்ட் ஸ்மித் எழுதிய இந்தப் புத்தகம் தெளிவான சிந்தனைகளை எளிதான முறையில் எடுத்துச் சொல்லுகிறது. வெற்றி பெற்றவர்கள் ஏன் மீண்டும் வெற்றி பெறுகிறார்கள்.? கடின உழைப்பு என்றாவது கைமேல் பலன் தந்தது உண்டா? செய்யும் வேலைகளை திறமையாகச் செய்தாலும் சில நேரங்களில் வெற்றி தட்டிப் போவது ஏன்? கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒன்று வெற்றியின் விளிம்பில் ஏறும் பொழுது தள்ளிவிடுகிறதே அது ஏன்? அந்த எரிச்சலூட்டும், வெற்றிக்கு மாறான சிறிய செய்கை என்ன? ஒரு சாதாரண ஆளுமை குணாதிசயம் நம்மை அறியாமலேயே தடைசெய்து கொண்டிருப்பதை அறிவீர்களா? இது போன்ற கேள்விகளுக்கு தனிநபர்களுக்கும், நிறுவன மேலாளர்களுக்கும், தலைவர்களுக்கும் எளிதில் புரியும் வண்ணம் எழுதிய கருத்துகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.
வணிக நிறுவனங்களில் திறமை வாய்ந்த ஆண்களும் பெண்களும் கடின உழைப்பால் மேல்தட்டுக்கு பதவி உயர்த்தப்படுகிறார்கள். அரிதான விதிவிலக்காக சில நேரங்களில் உயர் அதிகாரிகள் புத்திசாலிகளாகவும், திறமைசாலிகளாகவும் மற்றவர்களை வசீகரிக்கும் வண்ணம் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுள்ளும் ஒரு சிலரே உச்சிக்கு போகின்றார்கள். ஏனென்றால் எது ஒருவரை வெற்றிக்கு தள்ளியதோ அதே காரணி மறுபடியும் வெற்றிக்கு உதவாது என்பதுதான் இந்த புத்தகத்தின் ஒரு வரி கதை.
வெற்றியின் முரண்பாடுகள்
கூரிய பற்களோடு ஒரு கரடி நீரில் இருந்து துள்ளி குதிக்கும் சிறு மீனை பிடித்துவிடுவதை போன்ற ஒரு விளம்பரம் என்ன செய்தியை உங்களுக்கு கூறுகின்றது என்ற கேள்விக்கு இரு வேறு பதில்கள் கிடைத்தன. 1.அந்த மீன் கரடியின் வாயில் விழும் 2. கரடியின் வாய்க்கு அருகில் இருந்தாலும் அந்த மீனை கரடியால் பிடிக்க முடியாது.
இதில் பெரும்பாலானவர்கள் கரடியை போல மீனை எளிதில் பிடித்துவிடுவேன் என்ற முதல் விதியை பின்பற்றுவதால் மன உளைச்சலுக்கும் எரிச்சலுக்கு ஆளாகி தோல்வியை தாங்க முடியாமல் போகின்றார்கள். மாறாக, இதுவரை கரடி வாயில் விழுந்த மீன்களை போல நானும் விழமாட்டேன் என்ற விதியை பின்பற்றுபவர்கள் சென்ற முறை கிடைத்த வெற்றி நிச்சயமாக இந்த முறையும் கிடைக்கும் என்ற நம்பிக்கையை புறம் தள்ளுகின்றார்கள். ஆகவே இரண்டாவது விதியை பின்பற்றுபவர்கள் வெற்றி அடைந்தால் களிக்கமாட்டார்கள், தோல்வி அடைந்தால் குமைந்து போக மாட்டார்கள்.
நம்மை நாமே எப்படி ஏமாற்றிக்கொள்கின்றோம்?. நம்முடைய சாதனைகளையும் பங்களிப்பையும் எவ்வாறு நம்புகின்றோம் என்பதற்கு கீழ்கண்ட விளக்கங்களை காணலாம்.
பங்களிப்பை அதிகமாக மதிப்பிடுதல்
மற்றவர்களைக் காட்டிலும் தொழில் சார்ந்த திறமைகளில் மிகவும் சிறந்தவர்கள் என்ற தவறான உயர்ந்த எண்ணத்தை வளர்த்தல்
செயல்பாடுகளில் மிக அதிக லாபம் ஈட்டுவதாக எண்ணிக்கொண்டு உண்மையான மற்றும் மறைமுக செலவீனங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளாதிருத்தல்.
எந்த ஒரு செயலும் நேர்மறையாக வலுவூட்டும் வண்ணம் இருந்தால் அந்த செயல் பழக்கமாக மாறிவிடுகின்றது. சில நேரங்களில் இந்த வெற்றி, ‘வெற்றியின் முரண்பாடாக’ திரிந்து விடுகின்றது. இந்த வழி வெற்றிக்கு உதவியது. வெற்றி அடைய அடுத்த முறையும் இதே வழியை பின்பற்றுவேன் என்பதுதான் வெற்றியின் முரண்பாடு. தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்ளும் வெற்றிபெற்ற மனிதர்கள் மோசமானவர்கள் என்று சொல்ல இயலாது. வெற்றி பெறுபவர்கள் அனைவரும் தவறான நம்பிக்கையில் வெற்றி பெறுகின்றார்கள் என்பது மோசமான உதாரணம் ஆகாது. நம்மை பற்றிய அற்புதமான எண்ணங்களும், நம்பிக்கையும் தன்னம்பிக்கையை தூண்டி வளரச் செய்கின்றன.
தவறான நம்பிக்கைகள் வெற்றியைத் தந்தாலும் மாற்றத்தைத் தடுத்துவிடும். வெற்றி, முரண்பாடுகளை தாண்டி வருவதற்கு ‘எந்த செயல் இங்கு சேர்த்ததோ அந்த செயல் மீண்டும் வெற்றிக்கு துணைவராது’ என்ற நம்பிக்கையை வளர்த்து கொள்வதோடு விழிப்போடு இருக்க வேண்டும். எந்த நிறுவனத்திலும் மளமளவென வெற்றிபடிக்கட்டுகளில் ஏறினாலும் திடீர் என்று எரிச்சலூட்டும் சின்ன சின்ன பழக்கவழக்கங்கள் பூதாகரமாக பார்க்கப்படும்.
வேண்டாத பழக்கங்கள்
நடத்தை திருத்துதலுக்கு உட்பட்டது. மாற்றம் என்பது எல்லா மனித திறமைகளுக்கும் சார்ந்தது. உதாரணமாக நன்றி சொல்ல மறப்பவர்கள் அதை ஒரு முக்கியமான நிகழ்வாக நினைத்து அடிமனதில் இருந்து நன்றி சொல்ல பழகிக்கொள்ள வேண்டும். நன்றி கூறுவது என்பது ஒருவரை புகழ்வதற்கு அல்ல மாறாக நம்முடைய பணிவையும், அடிமனதில் இருந்து எழக் கூடிய உணர்வுகளையும் வகைப்படுத்தி நன்றி அறிதலோடு நினைத்து பார்க்கின்றோம். நமக்கு பிடித்தமான செயல்களை செய்யும் பொழுதோ அல்லது கோபம் உண்டாகும் பொழுதோ உணர்ச்சிவசப் படுக்கின்றோம். அவ்வாறு உணர்ச்சி வசப்படும் போது இந்த உலகே நம்மை வேடிக்கை பார்க்கின்றது. இந்த உணர்வு பூர்வமான சறுக்கலை எதிர்கொள்ளுவது மிகப் பெரிய சவாலாகும். இது போன்ற நேரங்களில் எரிச்சலூட்டும் சில செயல்களை செய்து கொண்டே இருப்போம். அந்த எரிச்சலூட்டும் செயல்களில் ஒன்று இரண்டை வரிசைப்படுத்தி நடத்தையில் மாற்றம் கொண்டு வர வேண்டும்.
ஒரே நாளில் அனைத்து நடத்தைகளையும் மாற்றிக் கொள்ள முடியாது. ஒரு மிகப் பெரிய கட்டிடம் கட்டுவதற்கு ஒவ்வொரு கல்லும் முக்கியமானதாகும். அதே போல நீட்டிக் கொண்டிருக்கும் இரண்டொரு கற்களை மட்டும் எளிதில் எடுத்து விடலாம். கட்டிடத்தின் ஒரு பகுதியை முழுவதும் உடனே மாற்ற வேண்டும் என்றால் இழப்பு கட்டிடத்திற்கு மட்டுமல்ல கட்டுபவருக்கும் என்று சேர்ந்தே இருக்கும்.
நடத்தையில் மாற்றங்களை கொண்டு வர நடந்தவைகளை நினைத்து மகிழ்ந்து பாராட்டிக் கொள்வதை விட மாற்றத்தை ஏற்படுத்த முனைந்து முன்னோக்கிச் செல்ல வேண்டும். உண்மையை கூறி நடக்கக் கூடாதவைகளை தவிர்த்துக் கொள்வது புத்திசாலித்தனம். உடன் பணிபுரிபவர்களிடம் மாற்றங்களை கொண்டு வரும் பொழுது அவர்களுக்கு என்ன தேவையோ, எதை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்களோ அது போன்ற நடவடிக்கைளை ஊக்குவிக்க வேண்டும், மற்றவர்களிடம் நடத்தை பற்றிய மாறுதல்களை ஏற்படுத்தும் பொழுது படிப்படியாக தொடர்ந்து ஊக்குவித்தல் அவசியம். தொடர்புகள் வலுவானதாகவும், குறிப்பிட்ட கோணத்திலும் இருக்க வேண்டும். உதாரணமாக, கடந்த மாதங்களில் இருந்ததை விட வரும் மாதங்களில் நீங்கள் ஏற்றுக் கொண்டிருக்கும் மாற்றங்கள் எந்த அளவில் பயன்தரும் என்று அவர்கள் புரிந்துக் கொள்ளும் வகையில் செயல்பட வேண்டும்.
எந்த ஒரு பெரு நிறுவனத்திலும் நேர் மறையான மாறுதல்கள் நடத்தையில் ஏற்படுவதற்கு அவை மிகவும் சிறிய அளவில் இருந்தாலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். “வளர்ந்து வரும் பெரும்பான்மையான தலைவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி அறிந்துகொள்வதில் அவசியமில்லை. மாறாக, எதைத் தவிர்க்க வேண்டும், எதைக் குறைக்க வேண்டும் எதை மாற்ற வேண்டும் என்பதை பற்றி அறிந்து கொள்வது மிகவும் அவசியம்”. ஏதேனும் ஒரு சிறிய அளவில் மாற்றம் நேரும் பொழுது அது முன்னேற்றத்திற்கு உத்திரவாதம் அளிக்கும். இதுவரை நீங்கள் ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு இருந்தால் நிச்சயமாக உங்களை நீங்களே மாற்றிக் கொள்வதற்கு வாய்ப்புகள் அதிகம். நன்றி கூறுவதற்கு பழகிக் கொள்வதற்கும் தேவையானவைகளை மாற்றிக் கொள்வதற்கும் என்று 20 வித்தியாசமான படிப்படியான முறைகளை சுய முன்னேற்றத்திற்கு நூல் ஆசிரியர் எடுத்துக் கூறுகிறார்.
ஏனென்றால், இந்த புத்தகத்தின் மையக்கருத்து மிகவும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தாக்கத்தைத் தரக்கூடிய ஒன்று. இதுவரை அடைந்த வெற்றிகள் முரண் பாடுகளின் அடிப்படையில் இருந்தாலும் அதுவே சரியென்று ஏற்றுக் கொள்வது தான் நம்முடைய வழக்கமாக இருந்து வந்துள்ளது, அதிலிருந்து விலகி எரிச்ச லூட்டும் சிறிய பழக்க வழக்கங்களைத் தவிர்த்து புறந் தள்ளி நேர்மறையான, தேவையான புதிய மாற்றத்திற்கு உட்பட்ட நடத்தைகளை பின்பற்று வதன் மூலம் ஒளிமையமான, மகிழ்சியான, வளமான, எதிர்கால வெற்றிகள் வந்து சேரும். உங்களுடைய ஏதேனும் ஒரு எரிச்சலூட்டக் கூடிய தேவையில்லாத எந்த ஒரு செயலையாவது நீங்கள் முயன்று மாற்றங்களை ஏற்றுக் கொண்டீர்களானால் அடுத்த சுற்றில் வெற்றி அடையும் பொழுது உங்களுடைய வழி தனி வழியாக இருக்கும் என்று நூல் ஆசிரியர் அறிவுரை கூறுகிறார்.

Comments

Popular posts from this blog

வெற்றியாளர்கள் 'ஒருபோதும்' செய்ய விரும்பாத 9 விஷயங்கள்..!

வீடுகளில் எந்த மாதிரியான செடிகளை வைத்து குளுமையாக்கலாம்?

உலகின் முடிசூடா மன்னன் ஸ்டீவ் ஜாப்ஸ் சிந்தனைகள் சில..!