செல்போன் தலைமுறை புரட்சி…

செல்போன் தலைமுறை புரட்சி…
          மிகப் பெரிய வெற்றியாக அமைந்திருக்க வேண்டிய போராட்டம் மிக கரும்புள்ளியோடு முடிவடைந்திருக்கிறதுஜல்லிக் கட்டுக்கான இந்த இளைஞர்களின் போராட்டம், வரலாற்றுச் சிறப்பு மிக்க போராட்டமா என்றால் நிச்சயமாக இது வரலாற்று சிறப்பு மிக்க போராட்டமே.   தன்னெழுச்சியோடு அரசியல் கட்சிகளின் தலைமையின்றி ஒரு மிகப்பெரிய போராட்டத்தை தமிழக இளைஞர்கள் நடத்தி உலகையே தமிழகத்தை நோக்கி திரும்ப வைத்துள்ளனர். அப்படி உலகை வியக்க வைத்த ஒரு போராட்டம், இப்படித்தான் முடியும் என்று பலரும் ஆருடம் கணித்தது போலவே வன்முறையோடு முடிந்துள்ளது.
கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் சம்பிரதாயமான ஆர்ப்பாட்டங்களோடு ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் நிறைவடைந்து விடும் என்றே ஆட்சியாளர்கள் கருதினர்.   தடையை மீறி அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டையொட்டி கைது நடவடிக்கைகள் அரங்கேறின.   போராட்டம் தீவிர வடிவம் பெறும் என்பதை அறியாத ஆட்சியாளர்கள் உச்சநீதிமன்றத்துக்கு பதில் சொல்ல வேண்டுமே என்ற ஒரே காரணத்தால் அவசர அவசரமாக கைதில் இறங்கினர். மெள்ள மெள்ள ஜல்லிக்கட்டு தமிழர் அடையாளம் என்ற உணர்வு பரவி, தமிழகத்தின் இதர மாவட்டங்களில் போராட்டம் தொற்றிக் கொள்ளத் தொடங்கியது.
சென்னையில் போராட்டம் முழு வீச்சை அடைந்ததுபெருமளவில் மாணவர்களும், இளைஞர்களும் மெரினாவில் குவிந்தனர். சில நூறாக இருந்த எண்ணிக்கை லட்சங்களை தொட்டது.   மாணவிகள் பெண்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தது.   சென்னை கடற்கரை திருவிழாக் கோலம் பூண்டது.    குடும்பம் குடும்பமாக மக்கள் இந்த மாபெரும் திருவிழாவில் பங்கெடுக்கத் தொடங்கினர்ஜல்லிக் கட்டுக்கு என்று குவிந்த கூட்டம், பண மதிப்பிழப்பு, விவசாயிகள் பிரச்சினை, காவிரி நீர் பிரச்சினை, அந்நிய குளிர்பானங்கள், என்று அனைத்து விவகாரங்களையும் விவாதிக்கத் தொடங்கியது.     இவை குறித்த முழக்கங்கள் விண்ணைப் பிளந்தன.

போராட்டத்துக்காக கூடிய கூட்டத்துக்கு உணவு, குடிநீர் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் ஆதரவு வழங்கப்பட்டது.   அடிப்படை சிக்கல்கள் இல்லாமல் இருந்ததால் போராட்டம் தொய்வின்றி நடந்தது.
தொலைக்காட்சி சேனல்கள் போராட்டத்தை கொண்டாடின.   24 மணி நேரமும் இடைவேளையின்றி நேரடி ஒளிபரப்பு செய்தன.   செய்தி ஊடகங்களுக்குள் யார் இளைஞர்களின் நற்பெயரைப் பெறுவது என்பதில் பெரும் போட்டியே நடந்தது.    முதல் இரண்டு நாட்கள் போராட்டத்தை கண்டு கொள்ளாமல் இருந்த தேசிய ஊடகங்கள், வேறு வழியேயின்றி போராட்டங்களை ஒளிபரப்பு செய்யத் தொடங்கினநேரில் செல்ல வாய்ப்பு கிடைத்தவர்கள் நேரில் சென்றனர்.   வாய்ப்பு இல்லாதவர்கள் தொலைக்காட்சிகள் மற்றும் சமூக ஊடகங்களில் ஆர்வத்தோடு போராட்டத்தை பின் தொடர்ந்தனர்.   தமிழகமே திருவிழாக் கோலம் பூண்டது.
தன்னெழுச்சியான மாணவ இளைஞர் போராட்டம் போலத்தான் வெளிப்படையாக தெரிந்தது.   ஆனால், இதில் எப்படி அரசியல் ஆதாயம் அடையலாம் என்று பல்வேறு சக்திகள் ஒரே நேரத்தில் இந்த போராட்டங்களை பயன்படுத்திக் கொள்ளத் தொடங்கின.
ஜெயலலிதாவின் உறவினர் தீபா, எம்ஜிஆர் சமாதியில் மலர் வளையம் வைத்து முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்ததுஅதே நாளில்தான் காலை ஏழரை மணி முதல் இளைஞர்கள் மெரீனாவில் கூடத் தொடங்கினர்.    தீபாவின் பத்திரிக்கையாளர் சந்திப்பை மறைத்து இருட்டடிப்பு செய்ய, ஆட்சியாளர்களுக்கு மாணவர்களின் போராட்டம் பெரும் உதவியாக இருந்தது. தங்கு தடையின்றி மாணவர்கள் கூட அனுமதிக்கப்பட்டனர்.    ஆனால் இப்படி கூடிய கூட்டம் மக்கள் வெள்ளமாக பெருகும் என்பதை, ஆட்சியாளரும் உணரவில்லை, மன்னார்குடி கூட்டமும் உணரவில்லைஆனால் இதில் தங்களின் அதிகாரத்தை நிலை நிறுத்திக்கொள்ள ஒரு அற்புதமான வாய்ப்பு உருவாகி உள்ளதாக இரு தரப்புமே உணர்ந்தது.
பன்னீர் செல்வம் தனது ஆளுமையை நிலை நிறுத்தவும், தனது முதல்வர் பதவியை காப்பாற்றிக் கொள்ளவும் இதை ஒரு நல்ல வாய்ப்பாக உணர்ந்து, உடனடியாக அவசர சட்டம் கொண்டு வருவது தொடர்பாக நடவடிக்கைகளை தொடங்கினார்.
2009ம் ஆண்டு ஈழப் போராட்டம் நடந்தபோது, அப்போதைய திமுக அரசு, அந்தப் போராட்டங்களை திட்டமிட்டு படிப்படியாக உடைத்து நீர்த்துப் போகச் செய்தது.   பெரும் இயக்கமாக உருவாக இருந்த அந்த இளைஞர் மற்றும் மாணவர் போராட்டம், காவல்துறை உதவியோடு பொய் வழக்களாலும், வன்முறையாலும் அடித்து நொறுக்கப்பட்டது. ஆனால் இந்த முறை அப்படிப்பட்ட இழிவான முறைகளை பன்னீர்செல்வம் அரசு கையாளவில்லைமாறாக மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முனைப்போடு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது.
டெல்லி சென்று நரேந்திர மோடியை சந்தித்தபோது, அவர் உதவி செய்ய முடியாது என்று கைவிரித்த நிலையில், மாநில அரசின் சட்டத் திருத்தத்துக்கு ஒத்துழைப்பு கிடைக்கும் என்ற உத்தரவாதத்தை பெற்று வந்தார்.   அதோடு அல்லாமல், டெல்லியிலேயே தங்கி சட்டத்திருத்தத்தை உள்துறை, சட்டம் மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சகங்களுக்கு அனுப்பி அவற்றின் ஒப்புதலை பெற்று, குடியரசுத் தலைவருக்கும் அனுப்பி வைத்தார்.
சட்டத் திருத்தத்துக்கு ஒப்புதல் கிடைக்கும் என்பது தெரிந்ததும், தமிழக அரசு சார்பில் ஞாயிறன்று ஜல்லிக் கட்டு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.   வெளியிடப்பட்ட அவசர சட்டம், விடுமுறை நாளில் பீட்டா உள்ளிட்ட அமைப்பினரால் உச்சநீதிமன்றத்தில் தடை பெற்று விடப்படுமோ என்ற அச்சத்தில், சட்ட நகல் ரகசியமாகவே வைக்கப்பட்டது.   அரசு சார்பில் அலங்காநல்லூர் உள்ளிட்ட இடங்களில் ஞாயிறன்று ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடுகள் நடத்தப்பட்டன.   இந்த இடத்தில் போராட்டம் நிறைவு பெற்று வெற்றி அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும்.   ஆனால், நிரந்தரத் தீர்வு வேண்டும் என்று போராட்டம் நடத்துபவர்கள் அறிவித்ததோடு, ஜல்லிக் கட்டு நடத்த விடாமல், பன்னீர்செல்வத்தையும் திருப்பி அனுப்பினர்.
இந்த இடத்தில்தான் சசிகலாவின் கணவரின் நடராஜ தாண்டவம் ஆரம்பமானது.   போராட்டம் நிறைவுக்கு வந்து பன்னீர்செல்வம் தன் பதவியை நிலை நிறுத்திக் கொண்டு விடுவாரோ என்று அஞ்சிய நடராஜன், தனது தமிழ் தேசிய தொடர்புகள் மற்றும் விவி மினரல்ஸின் வைகுண்டராஜனின் உதவியோடு, போராட்டத்தை நீடிக்க செய்தார்.  வைகுண்டராஜனின் நியூஸ் 7, வேலை  அசாதாரணமாக இந்த போராட்டத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்தது.   ஒரு கட்டத்தில், அவசர சட்டத்துக்கு எதிராக மத்திய அமைச்சர் மேனகா காந்தி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் என்ற வாட்சப் வதந்தியை சர்பார்க்காமல் செய்தியாக வெளியிட்டது.    இந்த செய்தி நிறுவனத்தின் இந்த நடவடிக்கை இதன் உள்நோக்கத்தை வெளிப்படுத்தியது.
பின்னிருந்து இயக்குவோரின் சதித்திட்டம் புரியாமல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களும், வறட்டுத்தனமான வாதங்களோடு போராட்டம் தொடர வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தனர்.   நிரந்தரத் தீர்வு வேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தினர்.   நிரந்தரத் தீர்வு என்ன என்பதற்கான விளக்கம் அவர்களிடத்தில் இல்லை.    சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறாத காரணத்தால், அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.   அவசரச் சட்டத்துக்கும், சட்டப்பேரவையில் இயற்றப்படும் சட்டத்துக்கும் ஒரே அதிகாரம் உள்ளது என்பதை யாருமே கவனத்தில் கொள்ளவில்லை. மீண்டும் மீண்டும் நிரந்தரத் தீர்வு என்ற முழக்கத்தை எழுப்பிக் கொண்டிருந்தனர்.

அரசு நினைத்திருந்தால் எப்போதோ இந்த போராட்டத்தை ஒடுக்கியிருக்க முடியும் என்பதை யாருமே கவனத்தில் கொள்ளவில்லை.   ஒரு மாநிலத்தின் முதல்வர் ஒரு நிகழ்ச்சிக்காக ஒரு ஊருக்கு சென்று, உள்ளே நுழையவிடாமல் திருப்பி அனுப்பப் பட்டது, எந்த அரசுக்கும் விடப்பட்ட நேரடி சவால்.    ஜெயலலிதா முதல்வராக இருந்திருந்தால் இது நடந்திருக்குமா என்பது அனைவரும் அறிந்ததே.   ஆனால் அரசின் பொறுமையை போராட்டக் குழுவினர் பலவீனம் என்று புரிந்து கொண்டனர்.
அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் என்று தொடங்கிய போராட்டத்தின் இலக்குகள் தொடர்ந்து மாற்றியமைக்கப்பட்டுக் கொண்டே இருந்தன.   ஜல்லிக் கட்டு நடத்தப் பட வேண்டும் என்ற கோரிக்கையை அரசு நிறைவேற்றிய பிறகு நிரந்தரத் தீர்வு என்ற குழப்பமான கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரமான தீர்வு என்பதே இல்லை என்பதை யாருமே புரிந்து கொள்ளத் தயாராக இல்லை.   மாநில அரசோ, மத்திய அரசோ, எந்த அரசு சட்டம் இயற்றினாலும் அந்த சட்டம் நிச்சயமாக உச்சநீதிமன்றத்தில் சோதிக்கப்படும் என்பதை யாரும் புரிந்து கொள்ள தயாராக இல்லை.    எந்த அமைப்பும் ஜல்லிக்கட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கக் கூடாது என்று ஒரு ஜனநாயகத்தில் எப்படியான நடவடிக்கை எடுக்க முடியும் ?   உச்சநீதிமன்றத்தை மூடி விடலாமா ?   அது சாத்தியமா ?   ஆனால் இவற்றை விவாதிக்கவோ, புரிந்து கொள்ளவோ யாருமே தயாராக இல்லை.
ஜல்லிக்கட்டுக்காக தொடர்ந்து சட்டப் போராட்டங்களை நடத்தி வந்த சேனாதிபதி, ராஜசேகர் உள்ளிட்டோர் போராட்டத்தை கைவிடுமாறு வெளிப்படையான கோரிக்கைகளை விடுத்தனர்.    போராட்டத்தில் முன்னணியில் இருந்த பலர், விடுத்த கோரிக்கைகளும் செவிசாய்க்கப்படவில்லை.
இன்று கிராமப்புரங்களில் விவசாயத்தின் நிலை என்ன ?   கடுமையான நெருக்கடியில் விவசாயமும் விவசாயிகளும் இருக்கின்றனரா இல்லையா ?    காளைகளின் பயன் என்னஅவை உழவுக்கு பயன்படுத்தப்படுவதில்லை.    வண்டி மாடுகளாக பயன்படுத்தப்படுவதில்லைட்ராக்டர்தான்இனவிருத்திக்காக பயன்படுகின்றனவா என்றால் அதுவும் இல்லை.   அரசின் கால்நடை பராமரிப்புத் துறை நிலையங்களில், வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்படும், உயர் ரக மாடுகளின் விந்துகளே, இனவிருத்திக்கு பயன்படுத்தப்படுகின்றன.    அப்படி இருக்கையில் வருடம் முழுவதும் தீவனம் அளித்து, வருடத்தில் ஒரு நாள் நடக்கும் ஜல்லிக்கட்டுக்காக காளைகளை வளர்க்கும் பொருளாதார வசதி படைத்தது யார்கிராமங்களில் பணம் கொழுத்த பண்ணையார்களால்தான் இதை சாத்தியப்படுத்த முடியும்.   உள்ளுர் மாட்டினங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன என்று பலத்த கோரிக்கை எழுந்தது.     உள்ளுர் மாட்டினங்களை வளர்க்க வேண்டாம் என்று உங்களை யார் தடுத்தார்கள் ?    வீடுதோறும் காளை மாடுகளை, நாட்டின மாடுகளை வளர்க்க வேண்டாம் என்று தடுத்தது யார் ?    யாரும் தடுக்கவில்லைபொருளாதார ரீதியாக இப்படி மாடு வளர்ப்பது என்பது சாத்தியப்படாத ஒரு அவலச் சூழலில் விவசாயம் இன்று இருக்கிறது என்பதே முகத்தில் அறையும் உண்மை.
ஜல்லிக்கட்டை யுட்யூபில் மட்டுமே பார்த்த இந்த இளைஞர்கள் சென்னையில் லட்சக்கணக்கில் கூடிய போராட்டம், பல காலமாக அழுத்தப்பட்டிருந்த உணர்வுகளின் வெளிப்பாடு என்பதாகவே இந்த போராட்டத்தை புரிந்து கொள்ள முடியும்.    வேலையிழப்பு, பண மதிப்பிழப்பு, பொய்த்த விவசாயம், செயல்படாத ஒரு மாநில அரசு, பொய்களையே பேசும் மத்திய அரசு என்று பல்வேறு விவகாரங்களின் மீது உள்ள கோபம் ஒரு மையப்புள்ளியை அடைந்து, ஜல்லிக் கட்டு போராட்டமாக வெடித்தது என்றே இதை புரிந்து கொள்ள முடிகிறது.    ஒரு நாள் ஜல்லிக்கட்டு நடத்துவதால், தமிழகத்தின் எந்த வாழ்வாதார பிரச்சினைகளும் தீரப்போவதில்லை என்பது அனைவருக்கும் புரியாமல் இல்லை.   ஆனாலும் போராட்டம் தொடர்ந்தது.
இந்தப் போராட்டத்தில் திமுக உள்ளிட்ட எந்த அரசியல் கட்சிகளையும், மாணவர்கள் அனுமதிக்கவில்லை.   இது அரசியல் கட்சிகளை கடும் அதிர்ச்சியடைய வைத்தது என்பது மறுக்க முடியாத உண்மை.   அரசியல் தலையீட்டை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தடுத்த காரணத்தால் போராட்டத்துக்கு எவ்விதமான தலைமையும் இல்லாமல் போனதுபோராட்டக்காரர்களோடு பேச்சுவார்த்தை நடத்த காவல் துறை முயன்றபோது, யாரோடு பேச்சுவார்த்தை நடத்துவது என்று புரியாமல் தவித்தனர்ஆர்ஜே பாலாஜி, ராகவா லாரன்ஸ், இயக்குநர் கௌதமன் போன்றோர் மாணவர்களின் பிரதிநிதிகளாக மாறினர்.    தலைமை இல்லாத காரணத்தால், எந்த கட்டத்தில் போராட்டத்தை நிறுத்துவது என்று யாருக்குமே புரியாத ஒரு குழப்பமான சூழல் இறுதி வரை நிலவியது.
பல்வேறு தமிழ் தேசிய இயக்கங்கள் மற்றும் நக்சல் ஆதரவு இயக்கங்களுக்கு, இளைஞர்களின் இந்த போராட்டம் வாராது வந்த மாமணியாக இருந்தது.     தாங்கள் நடத்திய பல்வேறு போராட்டங்கள் மற்றும் இயக்கங்களின்போது, இது போன்ற கூட்டம் கூடியதை பார்த்தே இராத இந்த இயக்கங்கள், இந்த கூட்டத்தை எபப்பாடுபட்டாவது அப்படியே நிறுத்தி வைக்க வேண்டும் என்பதில் தீவிர முனைப்பு காட்டின.   ஜல்லிக் கட்டுக்கு எதிராக கடுமையான நிலைபாடு கொண்டிருந்த இயக்கம் மக்கள் கலை இலக்கியக் கழகம்.   2008ம் ஆண்டு புதிய ஜனநாயகம் இதழில் வெளியிடப்பட்ட கட்டுரையில், ஜல்லிக்கட்டு குறித்து இப்படி குறிப்பிடப்பட்டிருந்தது. “ஏறு தழுவுதல் மட்டும்தான் பாரம்பரியமாக வந்ததா? சாதிதீண்டாமை, வலங்கை இடங்கை வெறியாட்டங்கள் கூடப் பாரம்பரியமாக வந்தவைதான். அதற்காக அவற்றையெல்லாம் ஆதரிக்க முடியுமா? பாரம்பரியமாக நீடித்துவந்த பொட்டுக் கட்டுதலைச் சட்டம் போட்டுத் தடுக்க முற்பட்டபோது, பார்ப்பனஆதிக்க சாதியினர் பதறியதைப் போலத்தான் இருக்கிறது, சாதிவெறியை மறைத்துக் கொண்டுதமிழன் வீரம்’, ‘பாரம்பரியம்எனப் பூசி மெழுகிடும் வாதமெல்லாம்.” இணைப்பு  ஆனால் இந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் முன்னணியில் இருந்தவர்கள் மக்கள் அதிகாரம் மற்றும் மக்கள் கலை இலக்கிய கழகத்தினர்.
இளைஞர்களின் எழுச்சியை ஒவ்வொரு அமைப்பும் தங்களுக்கு சாதகமாக திருப்பவே முயற்சித்தன.     ஏனெனில் இப்படியொரு மக்கள் திரளை அவர்கள் பார்த்ததேயில்லை. 1995ம் ஆண்டு, அப்போதைய ஆளுனர் சென்னா ரெட்டி, ஜெயலலிதா மீது வழக்கு தொடர சுப்ரமணியன் சுவாமிக்கு அனுமதி அளித்தார்.   இதனால், தமிழகத்தில் சுப்ரமணியன் சுவாமிக்கு செல்வாக்கு அதிகரித்தது. அவர் தனது ஜனதா கட்சியின் சார்பில் சென்னை மைலாப்பூரில் ஒரு பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
அதிமுகவின் ரவுடிகள் எஸ்டி சோமசுந்தரம் மற்றும் மதுசூதனன் தலைமையில் கூலிப் படையினர் அந்த கூட்டத்தில் கட்டவிழ்த்து விடப்பட்டனர்.   மேடையில் கல்லெறியப்பட்டது.    சுவாமிக்கு பாதுகாப்பாக இருந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர், கூட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே சுவாமியை பத்திரமாக ஒரு வேனில் ஏற்றினர்.   வேனில் ஏறிய சுவாமி, “என்ன ஆச்சுஎதற்காக வேனில் ஏற்றுகிறீர்கள்என்றதும், உங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறியுள்ளனர்.    என் கட்சிக்கு இப்படி கூட்டம் வந்தது இதுதான் முதல் முறை.   இனி எப்போ வரும்னே தெரியலை.   இப்போ போயி பேச விடாம தூக்கிட்டு வந்துட்டீங்களே என்று வருத்தப்பட்டுள்ளார்.
அவரின் வருத்தத்தைப் போலத்தான் இந்த அமைப்புகளின் வருத்தமும் இருந்தன.    ஞாயிற்றுக் கிழமை சேனாதிபதி உள்ளிட்டவர்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பில் போராட்டத்தை கைவிடுமாறு கூறிய பிறகும், போராட்டம் தொடர வேண்டும் என்று வலியுறுத்தியது இத்தகைய அமைப்புகளேஞாயிறன்று இரவு மாணவர்களிடையே உரையாற்றிய இயக்குநர் கௌதமன்குடியரசுத் தலைவர் கையெழுத்திட்ட அவசர சட்டத்தின் நகல், திங்களன்று வர உள்ளதாகவும், அதன் பிறகு கூடி என்ன செய்வது என்று முடிவு செய்யலாம் என்றும் இளைஞர்களிடையே கூசாமல் பொய் பேசினார்.   அவர்களும் ஹோ என்று ஒலியெழுப்பி ஆரவாரம் செய்தனர்.   அவசர சட்டம் வெளியிடப்படாமல், ஜல்லிக்கட்டை அரசு எப்படி நடத்த முன் வந்தது என்று யாரும் கேள்வி எழுப்பவில்லை.   அன்றே பேசிய மற்ற இயக்கத்தினர், பெப்சி கோக்கை தடை செய்ய வேண்டும், பாதுகாப்புத் துறையில் அந்நிய முதலீட்டை தடை செய்ய வேண்டும், காவிரி நீர் மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வேண்டும் என்று கோரிக்கைகளை அடுக்கிக் கொண்டே சென்றனர்.   பீட்டாவை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்பதை ஏறக்குறைய அனைவருமே வலியுறுத்தினர்.
பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்றால், மனித உரிமைகளுக்காக போராடும் ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல், சுற்றுச் சூழலுக்காக குரல் கொடுக்கும் க்ரீன் பீஸ் போன் அமைப்புகளையும் அல்லவா தடைசெய்ய வேண்டும் ?    நமக்கு பிடிக்காது என்று பீட்டாவை தடை செய்ய தொடங்கினால், அவர்களுக்கு பிடிக்காது என்று மக்கள் அதிகாரம், மே 17 , நாம் தமிழர் என்று அவர்களும் தடை கோருவார்களே என்ன பதில் சொல்வீர்கள் ?   பீட்டா போன்ற அமைப்புகளை கருத்து ரீதியாக எதிர்கொள்வதே ஜனநாயகம்.
ஞாயிற்றுக் கிழமை இரவைத் தாண்டி போராட்டம் திங்கட்கிழமை காலை நீடித்ததே வன்முறைக்கு வித்திடத்தான்.    திங்களன்று காலை, காவல்துறை சார்பில்  ஆர்ப்பாட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.   ஆனால் அவர்கள் மறுத்தனர்.    மிக மிக அதிசயமாக லத்தி இல்லாமல் அவர்களை கலைக்கச் சென்றது காவல்துறைஅவர்களோ, கடலோரம் தஞ்சம் புகுந்தனர்பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் என்று அவர்களை அழைத்தபோதும், ஒருவரும் வரவில்லை.   மாறாக, ஜல்லிக் கட்டுக்கு நிரந்தர தீர்வு என்று பழைய பல்லவியையே பாடிக் கொண்டிருந்தனர்.

மெரினா சூழலை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பதற்காக ஒட்டுமொத்த காவல்துறையும் மெரீனாவில் குவிக்கப்பட, நகரத்தின் இதர பகுதிகள், சமூக விரோதிகளின் கைகளுக்குள் சென்றதுஐஸ்ஹவுஸ் போன்ற பதற்றமான பகுதிகளில் போதுமான காவல்துறையினரை நிறுத்தியிருக்க வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் சென்னை மாநகரத்தை பைனாக்குலர் மூலம் நிர்வாகம் செய்தார் ஆணையர் கமிஷனர் ஜார்ஜ்.
காவல் நிலையம் தாக்கப்பட்டது என்ற செய்தி பரவியதுமே, காவலர்கள் வேட்டை நாய்களைப் போல பாய்ந்தனர்கையில் சிக்கியவர்களை அடித்து நொறுக்கினர்.    வாகனங்களை நொறுக்கினர்தீ வைத்தனர்.    காவல்துறையினர் இல்லாத இடங்களில் பதிலுக்கு காவல்துறையின் வாகனங்களும் பொதுச் சொத்துக்களும் கொளுத்தப்பட்டன.
போராட்டத்தின்போது, கேக் வழங்கி அன்போடு பேசிய காவல்துறையினரைப் பார்த்ததும் இளைஞர்கள் காவல்துறை உண்மையிலேயே மக்களின் நண்பன் என்று தவறாக நம்பினர்.   காவல்துறையின் உண்மை முகம் வன்முறை மட்டுமே.   வன்முறையை நிகழ்த்துவதற்காகவே அவர்கள் பயிற்சியளிக்கப்படுகிறார்கள்.   உருவாக்கப்படுகிறார்கள்.   சென்னை உயர்நீதிமன்றத்தில் 2009, பிப்ரவரி 19 அன்று நாள் முழுவதும் நடந்த காவல்துறையின் வன்முறை வெறியாட்டத்தை நேரில் பார்த்துள்ளேன்நேற்று நடந்தது ஒன்றுமே அல்ல.  கொடியங்குளம், தாமிரபரணி, பரமக்குடி, உயர்நீதிமன்றம் என்று காவல்துறையின் வன்முறை வெறியாட்டத்துக்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.



ஒரு வார காலமாக விடுப்பு இல்லாமல், தொடர்ந்து வெயிலில் பணியாற்றி வைத்திருந்தவர்களை, அடியுங்கள் என்று அனுப்பினால் என்ன ஆகும் என்பதே நேற்றைய காவல்துறையின் வன்முறை.   காவல்துறையின் மற்ற எல்லா வன்முறைகளையும் போல, இதிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப் படப் போவதில்லை.   ஒரு நாளும் எடுக்கப்படப் போவதில்லைதிமுக அரசாக இருந்தாலும் இது நடந்திருக்காதுஏனெனில் இதுதான் சிஸ்டம்.
ஜல்லிக் கட்டுக்காக நடந்த இந்த போராட்டத்தைப் போலவே இதர மக்கள் பிரச்சினைகளுக்காகவும் மாணவர்களும், இளைஞர்களும் திரளுவார்களா அப்படி திரண்டாலும் அதை அரசு இயந்திரம் இது போல அனுமதிக்குமா என்பது சந்தேகமே.   இருப்பினும், 1965க்கு பிறகு தமிழகத்தில் நடந்த எழுச்சிமிகு போராட்டம் இது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
தற்போதைய இளைய சமுதாயம் பொறுப்பற்ற செல்போன் தலைமுறை என்ற விமர்சனத்தை இளைஞர்கள் உடைத்தெறிந்துள்ளார்கள்.    செல்போன் மூலமாகவே சமூக பொறுப்புணர்வோடு போராட்டத்தை நடத்துவோம் என்பதை காட்டியுள்ளார்கள்.    செல்போன் மூலமாகவே ஒன்றிணைவோம் என்பதை உணர்த்தியுள்ளார்கள். சமூக அக்கறை மற்றும் பொறுப்புணர்வில் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதையும் நிரூபித்துள்ளார்கள்.   அந்த வகையில் ஜல்லிக்கட்டு போராட்டம் மகிழ்ச்சிதரத்தக்க வெற்றி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
நாளைய தலைமுறை நம்பிக்கை அளித்துள்ளது..

Comments

Popular posts from this blog

வெற்றியாளர்கள் 'ஒருபோதும்' செய்ய விரும்பாத 9 விஷயங்கள்..!

உலகின் முடிசூடா மன்னன் ஸ்டீவ் ஜாப்ஸ் சிந்தனைகள் சில..!

வீடுகளில் எந்த மாதிரியான செடிகளை வைத்து குளுமையாக்கலாம்?