சும்மா வருமா வேலை..?

சும்மா வருமா வேலை..?

'என்ன பண்ணனும், சொல்லுங்க. பண்றேன். நான் விரும்பற வேலை கிடைக்கணும்.' 

'கிடைக்கும். ஆனா.., நம்முடைய விருப்பம், சரியானதான்னு ஒருமுறைக்கு இருமுறை சரி பார்த்துக்கணும். 
அதுக்குத் தேவையான தகுதி, திறமை... நமக்கு இருக்கா...? வெறுமனே ஆசை மட்டுமே இருந்தா, ஊஹும்.. 
வேலைக்கு ஆகாது..' 

தகுதிகள்னு நாம் சொல்றது, நேர்மறையான, 'லெஜிடிமேட்' பணித் தகுதிகளைத்தான். 
அதன் பிறகு, அவற்றை மேலும் எப்படி மெருகூட்டலாம்னு பார்க்கலாம். 

எந்த வேலையா இருந்தாலும், அதுக்கான, குறைந்தபட்ச தகுதின்னு ஒண்ணு இருக்கு. அது நமக்கு இருக்கா...? 
அப்படியே இருந்தாலும், நம்முடைய தகுதியை விட அதிகமான தகுதிகளோட, எத்தனை பேர் போட்டியில இருப்பாங்க..?

உதாரணத்துக்கு, ஓட்டுனர் பணி. பத்தாவது தேர்ச்சி பெற்று இருந்தால் போதும்தான். ஆனா, எத்தனை பட்டதாரிகள் 
போட்டிக்கு வர்றாங்க...? யாரும் கோவிச்சுக்கக் கூடாது. எத்தனை பொறியியல் பட்டதாரிகள், அதிலும் மெக்கானிக்கல் கூட இல்லை; கம்ப்யூட்டர் இஞ்சினியரிங் முடிச்சுட்டு, 'டிரைவர்' வேலைக்கு 'அப்ளை' பண்றாங்க..! உண்மையா இல்லையா..? 

எதுக்கு சொல்றோம்..? 'குறைந்தபட்சத் தகுதி', இப்போது எல்லாம், ஒரு பொருட்டே இல்லை. 
சில மாதங்களுக்கு முன்பு உத்தரப்பிரதேசத்தில், மாநில அரசு அலுவலகங்களில், 
கடைநிலை ஊழியர் ('பியூன்') பணிக்கு விண்ணப்பித்தவர்களில், முனைவர் பட்டம் படித்தவர்களின் எண்ணிக்கையே, மொத்தப் பணியிடங்களை விட அதிகம்!! 

ஆக, கல்வியின் அடிப்படையில் பார்த்தால், அனேகமாக அத்தனை பேருக்குமே, பணிக்கான தகுதி இருக்கவே செய்கிறது. 

இதற்கு மேல் நமக்குத் தேவைப்படுவதெல்லாம் பணித் திறன்கள்தாம். எனவே, நமது திட்டங்கள், செயல்பாடுகள் எல்லாம், பணித்திறன் நோக்கியே இருத்தல் வேண்டும். 

நமக்கு விருப்பமான, நமக்கு இசைந்து வருகிற, நம்மால் பெற முடிகிற, எல்லாவற்றுக்கும் மேலாக, தற்போது பணிச் சந்தையில் மிக அதிக எண்ணிக்கையில் தேவைப்படுகிற, பணிகள் என்னென்ன.. அதற்கான திறன், தொழில் நுட்ப அறிவு என்ன.. போன்றவற்றை அறிந்து, அதற்குத் தன்னை முழுமையாகத் தயார் செய்து கொள்ள வேண்டும். 
பணி தேடும் முயற்சியில், இதுவே முக்கிய அங்கமாகும். 

இடையறாத, நீடித்த, தொடர் அறிவு (constant, sustained up-dating of knowledge) மட்டும்தான், நல்ல வேலையைப் பெற்றுத் 
தரும்; பணியில் மேலும் மேலும் முன்னேற்றத்தைக் கொண்டு வரும். இது, அத்துறையில் பணி புரியும் ஊழியர்கள், 

அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த வார, மாதப் பத்திரிகைகள் (niche magznes) மூலமாக மட்டுமே கிடைக்கும். 

'படிப்புதான் முடிஞ்சு போச்சே...(?) அப்புறமும் படி.. படி..ன்னா என்னத்தைப் படிக்கறது...?' 

'முதல்ல, இது வரைக்கும் படிச்சதுக்கு ஒரு வேலை போட்டுக் குடுங்க.. அப்புறமா.., மேற்கொண்டு படிக்கறதைப் பத்தி சாவகாசமா யோசிப்போம்..'  

'என்னா.. என்னா.. இதைப் பாரு.. இந்த வேலைக்கு ஒரு.. டிப்ளமோ.. இல்லை.. ஒரு 'சர்டிபிகேட் கோர்ஸ்' படிச்சிருந்தாலே போதும். நான் ஆனா இஞ்சினியரிங் முடிச்சு இருக்கேன். புரியுதா...? இன்னும் வேற படின்னு சொன்னா...? என்ன.., கிண்டலா..?' 

மேற்சொன்ன 'டயலாக்' எல்லம், சினிமாவுக்குத்தான் சரிப்பட்டு வரும். நிஜ வாழ்க்கைக்கு இல்லை. 
'தொடர்ந்து படிச்சுக்கிட்டே இருக்கணும்; கத்துக்கிட்டே இருக்கணும். அப்பதான், 'ஜாப் மார்க்கெட்'ல மரியாதை. 
இல்லைன்னா.., அவ்வளவுதான். நமக்குப் பின்னால இருக்கறவன், நம்மளைப் பாஸ் பண்ணிக்கிட்டுப் போய்க்கிட்டே இருப்பான்.' இதுதான் யதார்த்தம். 

வாழ்க்கையில் சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொரு இளைஞன், இளைஞியும் நாள்தோறும் தவறாமல் செய்தே தீர வேண்டிய 
காரியம் - 'knowledge up-date'. இதிலே கோட்டை விட்டு விட்டால், திண்டாட்டம்தான். யாராலும் உதவ முடியாது. நினைவிருக்கட்டும். 

பணிச் சந்தையில் சாதிப்பதற்குத் தேவையான மற்றொரு அம்சம் - முற்றிலும் சுய மனிதனாக இருப்பது. 
விண்ணப்பம், 'பயோ-டேட்டா' தொடங்கி, தன்னுடைய உடல்மொழி (body language) அணியும் உடைகள் தொடங்கி, 
அணுகுமுறை வரை, அனைத்திலும் தனித்துவத்துடன் விளங்குவது. 

ஒரேமாதிரியாக, 'ஸ்டீரியோ டைப்' பதில்களும், சிந்தனைகளும், எதிர்மறைப் பலன்களையே தர வல்லன. 
வித்தியாசமாக, முற்றிலும் புதிய கோணத்தில், தன் சொந்த, சுய சிந்தனையில் உதித்த கருத்துருக்களுடன் 
('கான்செப்ட்ஸ்') வேலைக்கு முயற்சிக்கும் எவரும், வாழ்க்கையில் வெல்வது, உறுதியிலும் உறுதி.

புதிய 'ஐடியா'வை உள்வாங்கிக் கொள்ளுங்கள்; 
எழுத்தில் கொண்டு வாருங்கள்; 
மேலும் மேலும் மேலும் மெருகு ஏற்றுங்கள்; 
தொடர்ந்து 'இம்ப்ருவைஸ்' செய்த வண்ணம் இருங்கள். 
மன நிறைவுடன், இறுதி வடிவம் தாருங்கள். 
களத்தில் இறங்குங்கள். 

'சார்... ஒரு நல்ல 'கான்செப்ட்' வச்சிருக்கேன். நல்லா வரும்னு நம்பிக்கை இருக்கு சார். ஒரு.. பத்து நிமிஷம் 
டைம்' குடுத்தீங்கன்னா, 'ப்ளே' பண்ணிக் காட்டறேன்; பார்க்கறீங்களா..?' இப்படிப் பட்டவர்கள் யாரும் தோல்வியுறுவதே இல்லை. 

ஆம். உலகம் இன்று, புதிய சிந்தனைகள், புதிய மாறுபட்ட முயற்சிகளை அரவணைத்து ஆதரவு தர, காத்துக் கொண்டு 
இருக்கிறது. உலகம் முழுக்க, எல்லா நாடுகளிலும், எல்லாத் துறைகளிலும் இதுதான் நிலைமை. இது, இளைஞர்களுக்கு 
அன்றி, யாருக்கு சாத்தியம்..? அதனால்தான் சொல்கிறோம் - இது இளைஞர்களின் காலம். 

அறிவை மேம்படுத்திக் கொள்ளல், தொடர்ந்த, கடுமையான உழைப்புக்குத் தன்னைத் தயார் செய்து கொள்ளல், 
தனது சுய சிந்தனை, முயற்சிகளுக்கு ஊறு வராமல் பார்த்துக் கொள்ளல், தளராத தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ளல்.... 

இவை போதும். 

இமாலய வெற்றி, இன்றே.. கண் முன்.. கை மேல். 

வாழ்த்துக்கள்! 

Comments

Popular posts from this blog

வெற்றியாளர்கள் 'ஒருபோதும்' செய்ய விரும்பாத 9 விஷயங்கள்..!

உலகின் முடிசூடா மன்னன் ஸ்டீவ் ஜாப்ஸ் சிந்தனைகள் சில..!

வீடுகளில் எந்த மாதிரியான செடிகளை வைத்து குளுமையாக்கலாம்?